Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பூண்டி நீர்த்தேக்கம் முதல் புழல் ஏரி வரை மண் அரிப்பால் சேதமான இணைப்பு கால்வாய் கரைகள்: சீரமைக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருவள்ளூர், செப்.9: சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல பயன்படும் இணைப்பு கால்வாயில் பூண்டி நீர்த்தேக்கம் முதல் புழல் ஏரி வரை பல்வேறு இடங்களில் மண் சரிந்து சேதமடைந்துள்ளன. அந்த கரைகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சென்னை பெருமாநகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர்த்தேக்கங்களில் முக்கிய நீர்தேக்கமாக பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் இருந்து வருகிறது. திருவள்ளூரை அடுத்த பூண்டி கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் 8,458 ஏக்கர் பரப்பளவில் கடந்த 1939ம் ஆண்டு முதல் 1944ம் ஆண்டு வரை 3,458 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டது.

இந்த நீர்த்தேக்கம் 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த, நீர்த்தேக்கம் சென்னை பெருமாநகர முன்னாள் மேயர் சத்தியமூர்த்தி பெயரால் உருவாக்கப்பட்டது. இந்த, நீர்த்தேக்கம் மூலம் சென்னை பெருமாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த, நீர்த்தேக்கத்தில் கூடுதலாக தண்ணீர் தேக்கி வைப்பதற்காக 2 அடி உயர்த்துவதற்காக கடந்த 1991ம் ஆண்டு பணி தொடங்கப்பட்டு, 1997ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்டு 2 அடி உயர்த்தும் பணி முடிக்கப்பட்டது. இதனால், நீர் இருப்பு 2 அடி உயர்ந்தது. இந்த நீர்த்தேக்கத்தில் 3,231 மில்லியன் கன அடி தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில் 35 அடி உயரத்தில் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கம் நிரம்பினால் அதில் இருந்து உபரிநீர் வெளியேறும் வகையில் 50 அடி உயரத்தில் 16 ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 1983ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பெற ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்பது அந்த ஒப்பந்தமாகும். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 1983ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் மற்றும் ஆந்திர முதல்வராக இருந்த என்டிஆர் ஆகியோர் கிருஷ்ணா நதிநீர் பெற ஒப்பந்தம் செய்தனர். ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்பது அந்த ஒப்பந்தமாகும். ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வரை 152 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டது. அங்கிருந்து பூண்டியில் உள்ள சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் அமைந்துள்ள 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்க 13 ஆண்டுகள் ஆனது.

குடிநீர் வழங்கும் நீர் ஆண்டாக ஜூலை முதல் ஜூன் வரை கணக்கின்படி 2 தவணைகளாக குடிநீர் திறப்பது என ஒப்பந்தமானது.

அதன்படி ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் கொசஸ்தலை ஆற்றில் வரும் மழை நீர் மற்றும் ஆந்திர மாநிலம் கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக பெறப்படும் நீர் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் தேக்கி வைக்கப்பட்டு சென்னை பெருமாநகர மக்களின் குடிநீரை பூர்த்தி செய்யும் வகையில் பேபி கால்வாய் மற்றும் இணைப்புக் கால்வாய்களின் வழியாக செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நீர்த்தேக்கங்களை சுற்றியுள்ள வரத்துக் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு, மழைநீர் வீணாகாமல் நீர்த்தேக்கத்திற்கு வந்து சேர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், மழை அதிகளவில் பெய்யும்போது, சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அதிகளவில் நீர் வந்து சேருகிறது. அதேபோல் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீர், அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் ஆகியவையும் பூண்டி நீர்த்தேக்கத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இதனால், பூண்டி நீர் தேக்கமும் விரைவில் நிரம்பி விடுகிறது. இதனால் சென்னை பெரு மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர் திறந்து விடப்படுகிறது.

இந்நிலையில், சோழவரம் ஏரிக்கு செல்லும் இணைப்பு கால்வாய் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் இருந்து புல்லரம்பாக்கம், ஈக்காடு, தண்ணீர்குளம் உள்பட பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பால் இணைப்பு கால்வாய் கரை பகுதி மிகுந்த சேதமடைந்துள்ளது. ஆனால் ஓராண்டாகியும் கிருஷ்ணா கால்வாய் துறையினர் சீரமைக்காததால் தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் மண் அரிப்பால் சேதமான கால்வாய் கரையை, கிருஷ்ணா கால்வாய் துறையினர் சீரமைக்காமல் அலட்சியம் காட்டி வருவதால் அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.