பூந்தமல்லி, செப்.8: திருவேற்காடு நகராட்சி 14வது வார்டு சிவன் கோயில் தெருவில் திருவள்ளூர் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18.50 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை மற்றும் திருவேற்காடு பேருந்து நிலையம் வளாகத்தில் ரூ.6.50 லட்சம் மதிப்பில் உயர் கோபுர மின்விளக்கு புதிதாக அமைக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி கடந்த 5ம் தேதி நடந்தது. திருவேற்காடு நகர மன்ற துணைத் தலைவர் ஆனந்த் ரமேஷ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ராமர் முன்னிலை வகித்தார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ரமேஷ் வரவேற்றார்.
இதில், சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் சசிகாந்த் செந்தில் எம்பி, ஆவடி எம்எல்ஏ ரமேஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டு ரேஷன் கடை மற்றும் உயர் கோபுர மின் விளக்குகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர். இதில், நகர மன்ற உறுப்பினர்கள் இளையராஜா, சுடலைமணி, விக்னேஸ்வரன், நகராட்சி அதிகாரிகள், காங்கிரஸ் மற்றும் தவெக நிர்வாகிகள், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், சலவை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


