11,757 மில்லியன் கன அடியாக இருந்த நிலையில் 5 நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு 5,175 மில்லியன் கன அடியாக சரிவு: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
திருவள்ளூர், செப்.8: மாவட்டத்தில் உள்ள 5 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 11,757 மில்லியன் கன அடியில் இருந்து, தற்போது 5,175 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை மற்றும் மிதமான மழை விட்டுவிட்டு பெய்து வருகின்றன. இவ்வாறு பெய்து வரும் மழையின் காரணமான, நேற்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் 35 அடி மொத்த உயரத்தில் 28.10 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 1,338 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலம், கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 230 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 250 கன அடி வீதமும், பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 15 கன அடி வீதமும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் 24 அடி மொத்த உயரத்தில் 15.62 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 1647 மில்லியன் கன அடியாகவும் தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 கன அடியாக உள்ளது. சென்னை பெருமாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 183 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. புழல் ஏரியின் 21.20 அடி மொத்த உயரத்தில் 13.38 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது 1774 மில்லியன் கன அடியாகவும் தண்ணீர் இருப்பு உள்ளது. இந்நிலையில், ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 507 கன அடியாக உள்ளது.
சென்னை பெருமாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 172 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. சோழவரம் ஏரியின் 18.86 அடி மொத்த உயரத்தில் 3.10 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது 135 மில்லியன் கன அடியாகவும் தண்ணீர் இருப்பு உள்ளது. இந்நிலையில், ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 80 கன அடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரியின் 36.61 அடி மொத்த உயரத்தில் 29.59 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 281 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
இந்நிலையில், ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 கன அடியாக உள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 2 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 11,757 மில்லியன் கன அடியில் தற்போது 5,175 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. செங்குன்றம், சோழவரம் சுற்றுவட்டார இடங்களில் நேற்று முன்தினம் இரவு பரவலாக இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த 24 மணி நேரத்தில் செங்குன்றம், சோழவரம் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருவதால், கடந்த சில நாட்களாக 245 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கும் நிலையில், மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து 507 கன அடியாக அதிகரித்துள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 1,774 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 13.38 அடி உயரத்தில் நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக புழல் ஏரியில் இருந்து 172 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.


