பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பொன்னேரி, செப்.8: வடசென்னை அனல் மின் நிலையத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 6 அலகுகளில் 2630 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்கத்தினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வட சென்னை அனல் மின் நிலைய வாயிலில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு தேர்தல் வாக்குறுதியில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்துள்ள நிலையில், அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் தங்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளர்கள் அனல் மின் நிலைய வாயிலில் முழக்கங்களை எழுப்பினர்.
இதில், அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட மின் வாரியம் முன்வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி பணிகளைப் புறக்கணித்து வட சென்னை அனல் மின் நிலைய தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்திலும் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு தங்களது கோரிக்கைகளுக்கு செவிமடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.


