Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவாலங்காடு அருகே குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

திருத்தணி, ஜூலை 8: திருவாலங்காடு ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருத்தணி-நாகலாபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவலாங்காடு ஒன்றியம் தாழவேடு ஊராட்சிக்குட்பட்ட தாழவேடு காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சி சார்பில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைத்து மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீர் சேமித்து, தெருக்குழாய்களில் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு மின் மோட்டார் ஒன்று பழுதானதால், மற்றொரு மின் மோட்டார் மூலம் மட்டுமே கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்ததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.

இந்நிலையில், அந்த ஒரு மின் மோட்டாரும் நேற்று திடீரென பழுதானதால் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், திருத்தணி-நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரமாக கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாலும், போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தாததால் கிராம மக்கள் சாலையில் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்ததால் பள்ளி வாகனங்கள் மற்றும் பேருந்துகளுக்கு பொதுமக்கள் வழிவிட்டனர்.

இதையடுத்து தகவலறிந்து வந்த திருத்தணி காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். உடனடியாக பழுதடைந்துள்ள இரண்டு மின் மோட்டார்களின் பழுதை நீக்கி தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதை ஏற்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.