Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோற்சவ தீர்த்தவாரி உற்சவம்

பூந்தமல்லி, ஜூன் 6: பூந்தமல்லியில் உள்ள மிகவும் பழமையான திருக்கச்சி நம்பிகள் மற்றும் புஷ்பவல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோற்சவம் கடந்த மே மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுவாமி தங்க முலாம் கேடய அலங்காரம், சேஷ வாகனம், கருட வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, மேனா பல்லக்கு எனப்படும் மோகினி அவதாரம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கடந்த 3ம் தேதி தேரோட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து 9ம் நாளான நேற்று மேனா பல்லக்கு மற்றும் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.

முன்னதாக, புஷ்பவல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாள் மற்றும் திருக்கச்சி நம்பிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. பின்னர், கோயில் தெப்பக்குளத்திற்கு எழுந்தருளிய சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதில், பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரமோற்சவத்தையொட்டி தினமும் காலை, மாலை திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சிந்துமதி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.