Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

ஊத்துக்கோட்டை காட்டுச்செல்லி அம்மன் கோயிலில் காட்சி பொருளான குளியலறை கட்டிடம்

ஊத்துக்கோட்டை, மே.6: செங்கரை கிராமத்தில், கோயில் அருகே காட்சி பொருளாக காணப்படும் கழிவறை மற்றும் குளியலறை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே, எல்லாபுரம் ஒன்றியம், செங்கரை கிராமத்தில் புகழ்பெற்ற காட்டுச்செல்லி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு ஒவ்வொரு வாரமும் வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.

அவ்வாறு வரும் பக்தர்களில் பெண் பக்தர்களே அதிக அளவில் காணப்படுவார்கள். அவர்கள் அங்குள்ள குளத்தில் குளித்து விட்டு ஈரத்துணியுடன் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். பின்னர், அவர்கள் உடை மாற்ற மரம் மற்றும் செடிகளின் அருகில் மறைவாக சென்று மாற்றி வந்தனர். இந்நிலையில், பெண்களுக்காக குளிக்கவும், உடை மாற்றவும் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்களும், பக்தர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதன்படி, அப்போதைய கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏ சி.எச்.சேகர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4.75 லட்சம் செலவில் 2011-2012ம் ஆண்டு பெண்களுக்காக கழிவறை மற்றும் குளியலறை கட்டிடம் கட்டிக்கொடுத்தார். இதை கோயிலுக்கு வரும் பக்தர்களும், அப்பகுதி மக்களும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த கழிவறை மற்றும் குளியறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்தபட்டது. பின்னர், தண்ணீர் வசதி இல்லாததால் பயன்பாடற்று புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இதனால், கோயிலுக்கு வரும் பெண் பக்தர்கள் குளிப்பதற்கும் உடை மாற்றுவதற்கும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

எனவே, இந்த குளியலறையை சீரமைத்து தர வேண்டும். மேலும், அங்குள்ள சிமெண்ட்டால் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி குடிநீர் இல்லாமல் சேதம் அடைந்துள்ளது. எனவே, இதையும் சீரமைக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பக்தர்களின் நலன் கருதி குளியலறையை சீரமைத்து தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.