பேரூராட்சி கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம்; பருவ மழைக்கு முன்பாக மழைநீர் கால்வாய்களை தூர் வாரவேண்டும்: பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்
புழல், செப்.5: செங்குன்றம், நாரவாரிகுப்பம் தேர்வு நிலை பேரூராட்சி கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம், பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார் தலைமையிலும், பேரூராட்சி துணை தலைவர் விப்ர நாராயணன், நிர்வாக செயல் அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையிலும் நேற்று கலைஞர் கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: 14வது வார்டுக்கு உட்பட்ட அறிஞர் அண்ணா தெருவில் ஈம காரியம் செய்யும் இடத்தில், தண்ணீர் வசதியின்றி பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகிறனர். இங்கு, ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். அறிஞர் அண்ணா தெரு, ராகவலு நாயக்கர் தெரு சந்திப்பு, சாய்பாபா கோயில் மற்றும் நேதாஜி தெரு சந்திப்பில் மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால், இவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
புதிதாக கட்டப்பட்டு வரும் செங்குன்றம் பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள கழிப்பிட வசதிக்கு பத்துக்கு, பத்து என்ற அளவில் செப்டிக் டேங்க் கட்டப்பட்டு வருகிறது. இதன், அருகே குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளதால், செப்டிக் டேங்க் கட்டினால் கழிவுநீர், குடிநீருடன் கலக்கம் அபாயம் உள்ளது. எனவே, செப்டிக் டேங்கினை வேறு இடத்தில் அமைக்க வேண்டும், பேரூராட்சியில் வரி கட்டமாறுப்பவர்களிடம் அதிக தொகை வசூலிக்கும் அலுவலர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தாமரைப்பாக்கத்தில் இருந்து செங்குன்றம் வழியாக சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. அந்த குடிநீரையும் செங்குன்றம் பகுதி மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
புழல் ஏரிக்கரை அருகில் நவீன சலவை கூடம் அமைக்கவும், கால்வாய் கரை தெருவில் கால்வாய் பணிகள் கட்டப்படாததால் கழிவுநீர், குடிநீருடன் கலந்து வருகிறது எனத் தெரிவித்து கழிவுநீர், குடிநீருடன் கலந்துள்ள தண்ணீரை பாட்டிலில் எடுத்துக்கொண்டு வந்து, கூட்டத்தில் அனைவரிடத்திலும் காண்பித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டபோது பரப்பரப்பு ஏற்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், ‘அதனைத்து கோரிக்கைகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து படிப்படியாக நிவர்த்தி செய்யப்படும்’ என்றார். பின்னர், பேரூராட்சியின் வரவு-செலவு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு, பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் உள்ள மழைநீர் கால்வாய்களை தூர்வாருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


