பொன்னேரி, நவ.4: மீஞ்சூர் அருகே உள்ள அனுப்பம்பட்டு பாலாஜி நகரில் உள்ள மின்கம்பம் ஒன்றில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக ஆபத்தான நிலையில் நீண்ட காலமாக இருந்து வந்தது. இதுகுறித்து பகுதி மக்கள் மின் வாரியத்துக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது முரசு புயல் காரணமாக கனமழை மற்றும் பலத்த காற்று அடித்த நிலையில் மேலும் மின் கம்பிகள் தாழ்வாக கீழே இறங்கின.
இந்நிலையில் நேற்று அவ்வழியாக சென்ற இரண்டு பசு மாடுகள், ஒரு புள்ளி மான் என அடுத்தடுத்து மின் கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து மின்சார துறையினருக்கும், வனத்துறையினருக்கும், வருவாய் துறையினருக்கும் அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர். ஆனால் எந்த அதிகாரிகளும் வரவில்லை.
எனவே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அனுப்பம்பட்டு பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


