Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

பூந்தமல்லியில் நகர் மன்ற கூட்டம்; ஆட்சி மாற்றத்திற்கு பிறகு எந்த வேலையும் நடைபெறவில்லை: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

பூந்தமல்லி, ஆக.4: பூந்தமல்லி நகர் மன்ற கூட்டத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு எந்த வேலையும் நடைபெறவில்லை என கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு சாட்டியுள்ளனர். அதனை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பூந்தமல்லி நகர் மன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் துணை தலைவர் தர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர் அசோக்குமார் பேசும்போது பூந்தமல்லி நகராட்சியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு எந்த வேலையும் நடக்கவில்லை. இந்த நகராட்சி கூட்டத்திற்கு ஆணையாளர், சுகாதார அலுவலர், சுகாதார துறை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியமான அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை‌. எங்கள் குறைகளை நாங்கள் யாரிடம் தெரிவிப்பது என்று தெரியவில்லை. மேலும், ஆளும் கட்சியினர் சொல்லித் தான் அதிகாரிகள் இப்படி நடந்து கொள்கிறார்களா என்று தெரியவில்லை.

அதனை தொடர்ந்து பூவை ஜேம்ஸ் பேசும்போது பூந்தமல்லி கண்டோன்மெண்ட் பகுதியில் குடியிருப்புகள் பூஜ்ஜியம் மதிப்பாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், புதிதாக வீடு கட்டவோ, வங்கி கடன் வாங்குவோர், வீட்டு மனைகளை விற்கவோ வாங்கவோ முடியவில்லை. இந்த மாற்றத்தின் காரணமாக சுமார் 3,000 குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் பல்வேறு வார்டு பகுதியில் குடிநீர் பிரச்னை, சாலை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் சௌந்தர்ராஜன், வடிவேலன், கன்னிமரியாள் வின்பிரட், கவிதா சுரேஷ், நீலாவதி ஐயப்பன், தீபா யுவராஜ் உள்பட பலர் பேசினர். நகர் மன்ற உறுப்பினர்களின் குறைகள், அவர்களது கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்று நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பூந்தமல்லி நகராட்சி 21 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கும், சீரான குடிநீர் வழங்குவதற்கும், ஆழ்துளை குழாய் கிணறு அமைத்தல், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம், மின் மோட்டார்கள் மற்றும் குடிநீர் பணிகளில் ஏற்படும் பழுதுகளை நீக்குதல், வரும் மழைக்காலத்தில் தேங்கும் மழை நீரை அப்புறப்படுத்த தேவையான டிராக்டர், மின் மாட்டார்கள், ஜேசிபி வாகனம், மழை நீர் வடிகால்வாய் தூர்வாருதல், நீர்மூழ்கி மோட்டார்கள், குடிநீர் குழாய் அமைத்தல், பூங்காக்கள் பராமரிப்பு, பொதுக்கழிப்பறைகள், சமுதாய கழிப்பறைகள் பழுது நீக்குதல், பசுமை உரக் குடில்கள் பழுது நீக்கி சீரமைப்பு மற்றும் பராமரிப்பு, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்த ரூ.4.35 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடர்ந்து நடைபெற 50க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.