தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் கட்டணம் வசூலிப்பை தடுக்க எளாவூர் சோதனைச் சாவடியில் ஆம்னி பேருந்துகளில் சோதனை
கும்மிடிப்பூண்டி, நவ.3: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுப்பது, போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக மாநில போக்குவரத்து ஆணையரகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக ஆம்னி பேருந்துகளைப் பயன்படுத்தும்போது, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மேலும், பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் மட்டுமே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், விதிமீறல்களில் ஈடுபடும் பேருந்துகளை சிறைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 12 சரகங்களில் சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எளாவூர் சோதனைச் சாவடி வழியாக ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ராஜஸ்தான், உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், எல்லைப் பகுதியில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் மற்றும் வாகன கண்காணிப்பு பணிகளை போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் தீவிரப்படுத்தினர். ஆனால், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பு, பர்மிட் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட நெறிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.


