புழல், நவ. 2: செங்குன்றம் அருகே 3 மணிநேர மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகரில் (நேற்றுமுன்தினம் இரவு சுமார் 12 மணி அளவில் இருந்து 3 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நள்ளிரவில் சென்னை கொல்கத்தா தேசிய சாலை பாடியநல்லூர் சிக்னலில் மறியலில் ஈடுபட்டனர். இங்கு கடந்த சில நாட்களாக அவ்வப்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டால் உரிய பதிலளிக்காமல் அலட்சிய போக்குடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் காவல்துறையினர் கனரக லாரி ஒன்று மின் கம்பியை அறுத்து விட்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், மின் ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் மின்சாரம் வழங்கப்பட்டதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


