Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

வாலிபரை கொன்று கடற்கரையில் புதைத்த வழக்கு: தலைமறைவு குற்றவாளி கைது

பொன்னேரி, நவ.2: நடிகை ராதிகா இல்ல பணிப்பெண்ணின் மகன் அடித்து கொலை செய்து பழவேற்காடு கடற்கரையில் புதைத்த வழக்கில் தலைமறைவு குற்றவாளி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த எழில்செல்வி சென்னையில் உள்ள நடிகை ராதிகா சரத்குமார் இல்லத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரசாந்த் (19) தனது மாமா ரமேஷ் என்பவருடன் வீடுகளுக்கு டைல்ஸ் ஓட்டும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி சென்னையில் உள்ள தனது தாயைப் பார்க்க செல்வதாக தாய்மாமனிடம் கூறிவிட்டு வந்த பிரசாந்த், மறுநாள் 28ம் தேதி தனது நண்பருக்கு வீடியோ கால் செய்து தன்னை சிலர் அடிப்பதாக கதறி அழுதுள்ளார்.

அதன் பிறகு அவரது தொலைபேசி அனைத்து வைக்கப்பட்டு அவரை தொடர்பு கொள்ள முடியாமல் மாயமாகி உள்ளார். இது தொடர்பாக பிரசாந்தின் மாமா ரமேஷ் கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், கடலூர் காவல்துறையினர் காணாமல் போனவர் பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், அதே கிராமத்தை சேர்ந்த பிரசாந்தின் நண்பன் வேதராசு என்பவரது மனைவியுடன் பிரசாந்துக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததும், தனது நண்பன் தினேஷ் என்பவருடன் சேர்ந்து பிரசாந்தை சென்னை அடுத்த பழவேற்காடு கடற்கரை பகுதியில் அடித்து கொலை செய்து புதைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடலூர் காவல் துறையினர் இருவரையும் கைது செய்து கடந்த 30ம் தேதி சென்னை அழைத்து வந்தனர். பழவேற்காடு அருகே சாத்தான்குப்பம் கடற்கரை பகுதியில் சடலம் புதைத்த இடத்தை அடையாளம் காட்டினர். இதனையடுத்து கடலூர் காவல்துறையினர், திருப்பாலைவனம் காவல்துறையினர் உதவியுடன் கடற்கரை மணலில் மேலோட்டமாக புதைக்கப்பட்ட சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கொலை சம்பவம் அரங்கேறிய பழவேற்காடு கிராம நிர்வாக அலுவலர் ராஜா அளித்த புகாரின் பேரில் ஆவடி காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் துணை ஆணையர் மகேஸ்வரி மேற்பார்வையில் திருப்பாலைவனம் காவல்துறையினர் கொலை வழக்கு பதிந்து கடலூர் காவல்துறையினர் கைது செய்து அழைத்து வந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, தனது நண்பன் வேதராசுவின் மனைவி சுமித்ராவுடன் ஏற்பட்ட பழக்கத்தால் சுமித்ரா அழைப்பின் பேரில் சென்னைக்கு வந்த பிரசாந்த், கடந்த 28ம் தேதி பழவேற்காட்டில் உள்ள தனது தோழி வீட்டிற்கு வந்தார். கணவரை விடுத்து வேறு ஒருவருடன் சுமித்ரா வந்ததால் அதிர்ச்சியடைந்த தோழி இது தொடர்பாக சுமித்ரா குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலை தொடர்ந்து சுமித்ராவின் குடும்பத்தினர் பழவேற்காடு வந்து சுமித்ராவை தங்களுடன் அழைத்துச் சென்று விட்டனர். மேலும் சுமித்ராவின் கணவர் வேதராசு அவரது நண்பர் தினேஷ், பழவேற்காடு சேர்ந்த சஞ்சய் மூவரும் இணைந்து பிரசாந்தை அடித்து கொன்று கடற்கரை மணல் பரப்பில் புதைத்தது தெரியவந்தது.

ஏற்கனவே கொலை வழக்கில் கடலூர் போலீசார் இருவரை கைது செய்து ஒப்படைத்த நிலையில், இந்தக் கொலையில் தொடர்புடைய பழவேற்காடு பகுதியை சேர்ந்த சஞ்சயையும் நேற்றுமுன்தினம் இரவு திருப்பாலைவனம் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வேதராசு (18), தினேஷ் (23), சஞ்சய் (20) ஆகிய மூவரையும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். நடிகை ராதிகா இல்ல பணிப்பெண்ணின் மகன் சென்னை அருகே அடித்துக் கொலை செய்து கடற்கரையில் புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.