திருப்பூர், செப்.28: உலக சுற்றுலா தினத்தையொட்டி, இந்தியாவின் பல்வேறு சுற்றுலாத் தலங்கள், பண்பாட்டுப் பாரம்பரியம் மற்றும் பயணங்களை மையமாகக் கொண்டு திருப்பூர் நிப்ட் டீ ஆடை வடிவமைப்பு கல்லூரியின் எம்.எஸ்சி. மாணவர்கள் பிளேட்ஸ் ஒவ்வொரு பயணத்திற்கும் ஒரு கதை என்ற பெயரிலான பொதுக் கலை நிறுவலை உருவாக்கியுள்ளனர்.
மாணவர்களின் படைப்பாற்றல் கற்றல் பாடப் பிரிவின் கீழ், இரண்டு மாத காலக் கூட்டு முயற்சியாக இந்த கலை நிறுவல் வடிவமைப்பு பெற்றுள்ளது. சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் கழிவுகளிலிருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை முதன்மையாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் நம்பர் பிளேட்களை மையக் கருத்தாகக் கொண்டு, இந்தியாவின் சாலைகள், மாநிலங்கள் மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் இதில் கதைகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு மாநிலங்களின் பழமையான நம்பர் பிளேட்டுகள், சாலைக் குறியீடுகள், போக்குவரத்து சிக்னல்கள், மைல்கற்கள் மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்கள் சிறிய அளவிலான 3டி வடிவங்களில் செய்யப்பட்டு, அக்ரிலிக் வண்ணங்களால் மெருகேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டின் அடையாளமாக தஞ்சைப் பெரிய கோயிலும், கேரளாவின் அடையாளமாக கதகளியும் இடம்பெற்றுள்ளன. பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வகுப்பறைக் கற்றலைத் தாண்டி, இந்தியாவின் புவியியல் மற்றும் கலை வடிவங்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இந்த நிறுவல் அமைந்துள்ளது.
மேலும், பயன்பாடற்ற பொருட்களுக்கு புதிய பயன்பாட்டை அளிப்பதன் மூலம் கழிவு மேலாண்மை மற்றும் நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தையும் இது உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த படைப்புகள் ஆடை வடிவமைப்புத் துறை என்பது ஆடை தயாரிப்போடு நின்றுவிடாமல், பொதுக் கலை மற்றும் பண்பாட்டுக் கதை சொல்லலுடனும் இணைந்து செயல்பட முடியும் என்பதை மாணவர்கள் நிருபிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தனர்.


