Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கடைகள் அமைப்பதற்கு முன்பே ஆன்லைனில் பட்டாசு விற்பனை சுறுசுறுப்புகடைகள் அமைப்பதற்கு முன்பே ஆன்லைனில் பட்டாசு விற்பனை சுறுசுறுப்பு

திருப்பூர், செப்.28: தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் மட்டுமே தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காவல் துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. கள ஆய்வுகள், பாதுகாப்பு உபகரணங்களின் தரம், கடைகளின் இடைவெளி மற்றும் தடையில்லாச் சான்றுகள் உள்ளிட்ட பலகட்ட சோதனைகளுக்குப் பிறகே தற்காலிகக் கடைகளுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து, மாவட்டத்தின் பிற ஊரகப் பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் அக்டோபர் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் மீது பலகட்ட கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்பட உள்ளதால், உரிய அனுமதி கிடைத்து கடைகளை அமைத்து முழுமையாக விற்பனையைத் தொடங்குவதில் இயல்பாகவே தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உள்ளூரில் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை தொடங்குவதற்கு முன்பாகவே, பொதுமக்கள் பலர் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் பட்டாசுகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்வேறு ஆன்லைன் தளங்கள் வழங்கி வரும் கவர்ச்சிகரமான தள்ளுபடி சலுகைகள், காம்போ ஆபர்கள் மற்றும் ஆர்டர் செய்த சில நாட்களிலேயே நேரடியாக வீடுகளுக்கே வந்து சேரும் கொரியர் வசதி போன்ற காரணங்களால், நடுத்தர மற்றும் இளைஞர் தரப்பினர் பலர் முன்னதாகவே ஆன்லைன் மூலமாக பட்டாசு வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சிலர் நேரடியாக இணையதளம் மூலமாக அதிக ஆபர்களை அளிக்க முன் வந்துள்ளனர்.

தற்காலிக பட்டாசு கடை அமைக்கும் உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘கடுமையான அரசு கட்டுப்பாடுகளைக் கடந்து, அதிக வாடகைக்கு இடங்களைப் பிடித்து 10 நாட்கள் மட்டுமே இயங்கக்கூடிய தற்காலிகக் கடைகளை அமைக்கின்றோம். தற்காலிக கடைக்கான வாடகை, மின்சார செலவு, பணியாளர்களின் தினசரி கூலி, போக்குவரத்துச் செலவு மற்றும் அரசு உரிமக் கட்டணம் என அதிக அளவில் நிதி முதலீடு செய்யவுள்ள நிலையில், ஆன்லைன் ‘பர்சேஸ்’ தீவிரமடைந்து வருவதால் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது, இதனால், பலகட்ட சோதனைகளைக் கடந்து 10 நாட்கள் மட்டும் கடை நடத்தும் பட்சத்தில், தாங்கள் போட்ட முதலீட்டையாவது லாபமின்றி திரும்பப் பெற முடியுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அரசு கடைகளுக்கு முன் கூட்டியே அனுமதி அளிக்கும் வகையில் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும், இல்லையெனில் ஆன்லைன் விற்பனை, கொரியர் மூலம் பெறுவது உள்ளிட்டவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்’’ என வலியுறுத்துகின்றனர்.

இன்புளூயன்சர்கள் மூலம் விளம்பரம்

இன்றைய டிஜிட்டல் சூழலில் ஆன்லைன் பட்டாசு விற்பனை அதிகரிப்பதற்கு சமூக வலைதள விளம்பரங்களும் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. சிவகாசியைச் சேர்ந்த பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களும், உற்பத்தியாளர்களும், உள்ளூரைச் சேர்ந்த பிரபல சமூக வலைதள இன்புளூயன்சர்களை நேரடியாகத் தங்கள் உற்பத்தி ஆலைகளுக்கே அழைத்துச் சென்று விளம்பரம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, இன்புளூயன்சர்களின் இல்லத்திற்கே இலவசமாக பட்டாசு பெட்டிகளை அனுப்பி வைத்து, அவர்கள் அதை அன்பாக்சிங் செய்தும், வெடித்து காண்பித்தும் வீடியோவாகப் பதிவு செய்து வெளியிடும் புதிய பாணி விளம்பர உத்தியையும் தீவிரமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வீடியோக்கள் ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ்களாக இணையத்தில் வேகமாகப் பரவி லட்சக்கணக்கான பொதுமக்களை நேரடியாக ஆன்லைன் ‘பர்சேஸை’ நோக்கி ஈர்த்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.