அகற்றப்படுவது எப்போது..? அமெரிக்காவின் வர்த்தக கெடுபிடிகளால் புதிய சிக்கலில் தவிக்கும் பின்னலாடை ஏற்றுமதி; மாற்றுச்சந்தைகளை விரிவுபடுத்தும் கட்டாயத்தில் திருப்பூர்
திருப்பூர், செப்.21: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியாவிற்கு எதிராக, இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு, அதிபர் டிரம்பின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் திருப்பூரின் மொத்த பின்னலாடை ஏற்றுமதி, சுமார் 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அமெரிக்க சந்தைகளை நம்பியுள்ளது. இந்த நிலையில், சர்வதேச அரசியல் மாற்றங்கள் மற்றும் வர்த்தகக் கொள்கைகள் காரணமாக அமெரிக்க அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள 100 சதவீதம் வரையிலான வரி உயர்வு நடவடிக்கையால், திருப்பூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளின் விற்பனை விலை அமெரிக்க சந்தையில் இரு மடங்காக உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இத்தகைய கடுமையான விலை ஏற்றம் காரணமாக, அமெரிக்க வர்த்தகர்கள் மற்றும் முன்னணி ஆடை நிறுவனங்கள் இந்தியாவைத் தவிர்த்துவிட்டு, தங்களுக்குச் சாதகமான வரி விலக்கு அல்லது குறைவான வரி விதிப்பு கொண்டுள்ள வங்கதேசம், வியட்நாம், கம்போடியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குத் தங்கள் ஆடைகளுக்கான ஆர்டர்களை மாற்றிவிடக் கூடிய சூழல் உருவாகும். இது திருப்பூரில் இயங்கி வரும் ஆயிரக்கணக்கான ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்துள்ள ஜாப்-ஒர்க் தொழில்களின் உற்பத்தியைப் பெரிதும் பாதிக்கும்.
அதோடு லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு 50 சதவீத வரி விதிப்பு அமலானபோது ஏற்றுமதி ஆர்டர்கள் குறைந்தது. லாபம் இழந்தது என பல்வேறு சிரமங்களை திருப்பூர் தொழில் துறையினர் சந்தித்துள்ளனர். அதிலிருந்து சில பாடங்களை கற்றுக்கொண்டுள்ள நிலையில் அமெரிக்காவின் இது போண்ற நடவடிக்கைகளால் இனி அமெரிக்க சந்தையை மட்டுமே முழுவதுமாக நம்பியிருக்காமல் மற்ற நாடுகளுடனான வர்த்தகத்தை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது என தொழில்துறையினர் கூறுகின்றனர்.
இது குறித்து திருப்பூர் தொழில்துறையினர் கூறுகையில், ‘‘திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதிக்கு அமெரிக்க சந்தை மிக முக்கியமானது. 50 சதவிகித வரி விதிப்பு இருந்தபோது பல இன்னல்களை எதிர்கொண்டோம். அதற்கு பிறகு அமெரிக்க சந்தையை காட்டிலும் புதிய சந்தைகளை விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவின் உயர்மட்ட குழுவுடன் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளும் நம் நாட்டின் பொருளாதார நிலை, கச்சா எண்ணெய் தேவைகள் உள்ளிட்டவை குறித்தும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
100 சதவீத வரி விதிப்பு அமலாகக்கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம்.ஆனால் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு அவ்வப்போது தன்னிச்சையான முடிவுகளால் உலக நாடுகளும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது. எனவே இந்தியா ஏற்றுமதியில் அமெரிக்காவை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையைக் படிப்படியாகக் குறைத்து, வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ள ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜப்பான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கான ஏற்றுமதி வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்கேற்ப திருப்பூர் ஏற்றுமதியாளர்களும் சர்வதேச அளவில் மற்ற நாடுகளுடனான ஆர்டர்களை ஈர்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்’’ என தெரிவித்தனர்.
மாற்றுச்சந்தைக்கான வியூகம்
அமெரிக்காவிற்கு இணையான மாற்று சந்தைகளைக் கைப்பற்ற செயற்கை நூலிழை ஆடைகளின் உற்பத்தியை அதிகரிக்க கடந்த சில ஆண்டுகளாகவே திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். தற்போதைய சூழலில் அமெரிக்காவிற்கு இணையான புதிய மாற்று வர்த்தகத்தைக் கையகப்படுத்துவதில் பாலியஸ்டர் ஆடைகளின் பங்கு மிக முக்கியமானதாக மாறியுள்ளது.
அதற்கேற்ப வரும் 2030ம் ஆண்டுக்குள் திருப்பூரின் மொத்த உற்பத்தியில் செயற்கை நூலிழை ஆடைகளின் பங்களிப்பை 50 சதவீதம் வரை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனவே அமெரிக்காவின் வரி விதிப்பு குழப்பங்கள், சர்வதேச தேவை உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியை ஊக்கப்படுத்தும் சிறப்புத் திட்டங்களையும் மானியங்களையும் முன்னெடுக்க வேண்டும் எனத் தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.


