Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

புரட்டாசி மாதம் தொடங்கியதால் மீன் வாங்க கூட்டம் குறைந்தது; காய்கறிகள் விலை அதிகரித்தது

திருப்பூர், செப்.21: திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மட்டுமல்லாது, கேரள மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அவ்வாறு கொண்டுவரப்படும் மீன்களை திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கி செல்வது வழக்கம்.

நேற்றைய தினம் 20 முதல் 30 டன் வரை கடல் மீன், டேம் மீன்கள் 45 டன் வரை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றில் வஞ்சிரம் மீன் கிலோ 600 ரூபாய் வரையிலும், இறால் மீன் 480 முதல் 550 ரூபாய், சங்கரா 240 முதல் 280 ரூபாய், ஊழி 300 ரூபாய், கிழங்கா 250, நண்டு 550 என விற்பனை செய்யப்பட்டன. இதேபோல் டேம் பாறை 130, ரோகு 170, கட்லா 200, நெய் மீன் 130, ஜிலேபி 100 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. வாரத்தின் அனைத்து நாட்களிலும் மீன் விற்பனை நடைபெற்றாலும் வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி முதல் மீன் விற்பனை நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் பரபரப்பாக காணப்படும் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட் நேற்றைய தினம் வழக்கமான கூட்டமில்லாமல் காணப்பட்டது. புரட்டாசி மாதம் தொடங்கியிருப்பதால் பெரும்பாலும் இந்துக்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அதனால் நேற்றைய தினம் திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டிற்க்கு மீன்கள் வாங்க பொதுமக்களின் கூட்டம் மிகக்குறைந்த அளவே இருந்தது. இருப்பினும் வரத்து குறைவாக வந்ததன் காரணமாக விற்பனையில் பெரிய பாதிப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.

மீன் மார்க்கெட்டில் கூட்டம் குறைந்தாலும் புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால், தென்னம்பாளையம் பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் தேவை கணிசமாக அதிகரித்தது. பொதுமக்கள் அசைவ உணவுகளைத் தவிர்த்து சைவ உணவுகளுக்கு மாறியுள்ளதால், வரத்து சீராக இருந்தபோதிலும் தேவையின் காரணமாக காய்கறி விலைகள் சற்று உயர்ந்தது. குறிப்பாக பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், பீன்ஸ், முருங்கைக்காய், கத்தரிக்காய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலையில் கிலோவுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்ந்திருந்தது. அதன்படி நேற்றைய தினம் பெரிய வெங்காயம் கிலோ ரூ.55 முதல் ரூ.65 வரையிலும், சின்ன வெங்காயம் ரூ.50-ரூ.70, உருளைக்கிழங்கு ரூ.30-ரூ.35, பீன்ஸ் ரூ.70-ரூ.90, கேரட் ரூ.45-ரூ.60, பீட்ரூட் ரூ.45-ரூ.50, கத்தரிக்காய் ரூ.30-ரூ.50, முருங்கைக்காய் ரூ.45-ரூ.50, பச்சை மிளகாய் ரூ.40-ரூ.65 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு விலையில் பெரிய மாற்றம் ஏதுமின்றி நிலைத்தன்மையுடன் காணப்பட்டாலும், புரட்டாசி மாத வழிபாடுகள் மற்றும் சைவ உணவுக் கட்டுப்பாடுகள் காரணமாக வரும் நாட்களில் காய்கறி விற்பனை மேலும் அதிகரிக்கும். வரத்து குறைந்தால் விலையும் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.