கோவை சூரியன் எப்.எம் 93.5 சார்பில் `வர்ணங்கள் ஆயிரம்’ ஓவியப்போட்டி பரிசுகளை அள்ளுவதற்கு அரிய வாய்ப்பு
கோவை, ஆக. 21: கோவை சூரியன் எப்.எம்.93.5 சார்பில் `வர்ணங்கள் ஆயிரம்’ என்னும் ஓவியப்போட்டி நாளை நடக்கிறது. கோவையின் முதன்மையான பண்பலை ரேடியோ சூரியன் எப்.எம் 93.5 சார்பில், மாணவ-மாணவிகளின் கலைத்திறனை மேம்படுத்தும் விதமாக `வர்ணங்கள் ஆயிரம்’ என்னும் தலைப்பில் ஆண்டுதோறும் ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாபெரும் ஓவியப்போட்டி கோவையை அடுத்த அவினாசி தெக்கலூர் பனப்பாளையம் ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இப்போட்டி, காலை 9 மணிக்கு துவங்கி, மாலை 3 மணி வரை நடக்கிறது.
3-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மூன்று விதமான தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. 3-ம் வகுப்பில் இருந்து 6-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ‘மரத்தின் மேல் உள்ள வாழ்க்கை’ என்ற தலைப்பில் காலை 9.30 மணிக்கு ஓவியப்போட்டி நடக்கிறது. 7-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு `காலநிலை மாற்றத்தின் தாக்கம்’ என்கிற தலைப்பில் காலை 11:30 மணிக்கு போட்டி நடக்கிறது. 10-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு `பொறுப்பை உணர்ந்த சுதந்திரம்’ என்கிற தலைப்பில் காலை 10.15 மணிக்கு போட்டி நடக்கிறது.
இப்போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு `சாட்’ பேப்பர் வழங்கப்படுகிறது. ஓவியம் வரைவதற்கு தேவையான பொருட்களை மாணவ-மாணவிகளே எடுத்து வர வேண்டும். 3ம் வகுப்பில் இருந்து 8ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவ-மாணவிகள், ஆசிரியர் அல்லது பெற்றோரை உடன் அழைத்து வர வேண்டும். ஓவியர் ஜித்தா, லலித் கலாஷேத்ரா துணை இயக்குனர் விக்னேஷ் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கிறார்கள். பரிசளிப்பு விழா மாலை 3 மணிக்கு நடக்கிறது. இப்போட்டியில், வெற்றி பெறுகிறவர்களுக்கு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று பரிசுகளும், ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படுகிறது. இப்போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.



