திருப்பூர், ஆக. 19: பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களிடையே விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் குறு மைய அளவில் தொடங்கி மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஏற்கனவே, திருப்பூர் மாவட்டத்தில் குறுமைய அளவிலான புதிய விளையாட்டு போட்டிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது பழைய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் வடக்கு குறு மைய அளவிலான மாணவிகளுக்கான கூடைப்பந்து மற்றும் ஹாக்கி போட்டிகள் நடைபெற்றது. கூடைப்பந்து போட்டிகளில் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் 4 அணிகளும், 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் 4 அணிகளும், 19 வயதிற்குட்பட்டவருக்கான பிரிவில் 5 அணிகளும் கலந்து கொண்டனர். இதேபோல், ஹாக்கி போட்டியில் 3 பிரிவுகளிலும் தலா 2 அணிகள் என 6 அணிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். கூடைப்பந்து போட்டியில் 14 மற்றும் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவின் முதல் இடத்தை ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றது. மற்ற பிரிவுகளிலும் முதலிடம் பிடித்த மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



