திருப்பூர், ஆக 14: திருப்பூர் மாநகராட்சிக்கு, பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டி வஞ்சி நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அரசு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு கடந்த 2021-22-ம் ஆண்டுகளில் ஆலாங்காடு, கருவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து குடியேறிய 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் அங்கன்வாடி மையம் மற்றும் நூலகக் கட்டிடங்கள் பல மாதங்களாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் பூட்டியே கிடப்பதாகவும், ரேஷன் கடை பெரும்பாலான நாட்களில் திறக்கப்படுவதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இங்குள்ள 40 பிளாக்குகளில் மொத்தம் 1,280 வீடுகள் உள்ள இந்த குடியிருப்பில் 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையக் கட்டிடம் பணிகள் முடிந்தும் திறந்து பயன்பாட்டிற்கு வராததால், நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் ஆரம்பக்கால விளையாட்டு வழிக் கல்வியின்றி வீடுகளிலேயே முடங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், இங்குள்ள ரேஷன் கடை பெரும்பாலான நாட்களில் திறக்கப்படுவதில்லை. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க 3 கி.மீ தொலைவில் உள்ள பழைய கடைகளுக்கே செல்ல வேண்டிய நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாலை நேரங்களில் வாசிப்பதற்கும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் மற்றும் இல்லத்தரசிகள் பயின்று பயிற்சி பெறுவதற்கும் ஏதுவாக கட்டப்பட்ட நூலகக் கட்டிடமும் இன்னும் திறக்கப்படாமல் கட்டிடமே வீணாகும் நிலையில் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இதுமட்டுமன்றி,ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வெறும் இரண்டு குடிநீர் தொட்டிகள் மட்டுமே உள்ளதால் குடிநீருக்காக மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்படாததால் சாக்கடை மற்றும் மனிதக்கழிவுகள் வெளியேற வழியின்றி, கழிவுநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குச் செல்லும் வழிகளிலும் கால்வாய்களிலும் தேங்கி நிற்கிறது.
மழைக்காலங்களில் கடுமையான துர்நாற்றத்துடன் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுவதால் கடும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி எல்லைக்குள் இந்த குடியிருப்பு அமைந்திருந்த போதிலும் குப்பைகளை சேகரிக்க குப்பை வண்டிகள் வருவதில்லை என்றும், இதனால் கழிவுகள் பொதுவெளியில் கொட்டப்பட்டு நோய் பரவும் அபாயம் நிலவுவதாகவும் குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, பயன்பாட்டிற்கு வராமல் பூட்டிக்கிடக்கும் அத்தியாவசிய மையங்களை உடனடியாகத் திறந்து, அடிப்படை வசதிகளை விரைந்து சீரமைக்க மாவட்ட நிர்வாகமும், குடியிருப்பு வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பாத்திமா கூறுகையில், இங்குள்ள மக்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. குறிப்பாக இங்குள்ள மக்களுக்கு 4.75 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை உள்ள நிலையில் 2.5 லட்சம் லிட்டர் வரையில் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பெரும் தொகை கொடுத்து தண்ணீர் வாங்கி பயண்படுத்துகிறோம். அதேபோல் ரேஷன் கடைக்கு பல கிமீ செல்ல வேண்டியுள்ளது. குப்பை மேலாண்மை, கழிவு நீர் மேலாண்மை முழுவதுமாக தோல்வியடைந்துள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து வாரியத்திடமோ, மாவட்ட நிர்வாகத்திடமோ முறையிட்டால் யாரும் கண்டுகொள்வதில்லை என தெரிவித்தார்.



