பல்லடம், ஆக.14: ஆன்லைனில் பத்திரப்பதிவு மாற்றத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று பல்லடத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பத்திர ஆவண எழுத்தர்களுக்கு பத்திரப்பதிவு துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் முறையில் சொத்து ஆவணங்களை பதிவு செய்யும் ஆன்லைன் பத்திரப்பதிவு முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், TNREGINET என்ற இணையதளம் வழியாக ஆவணங்களை சமர்ப்பித்து பத்திரங்களை பதிவு செய்ய முடியும். இச்சேவை, வரும் 17ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
இதுதொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம், பல்லடத்தில் நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்ட பதிவாளர் கவிதா தலைமை வகித்தார். மாவட்ட பதிவாளர் (தணிக்கை) முத்துக்குமார் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் பேசியதாவது: அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று உங்கள் பெயரில் பயனர் கணக்கை உருவாக்க வேண்டும். சொத்து விபரங்கள், வாங்குபவர் மற்றும் விற்பவரின் விவரங்களை பதிவு செய்து, வரைவு ஆவணத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம். ஆவணங்கள் சரிபார்க்கப் பட்ட பின்பு ஆன்லைன் மூலமாகவே பத்திரப்பதிவு பணிகள் முடிக்கப்படும்.
பத்திரப் பதிவு பணிகளை எளிதாக்கவும், ஊழல் முறைகேடுகளை தடுக்கும் நோக்கிலும், தமிழக அரசு, ஆன்லைன் பத்திரப் பதிவு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாற்றத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இதிலுள்ள சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். நிறை, குறைகள் மற்றும் மாற்றங்கள் ஏதேனும் செய்ய வேண்டி இருப்பின், அது குறித்து தெரியப்படுத்தலாம். இவ்வாறு அவர்கள் பேசினர். முன்னதாக, பத்திர பதிவு ஆன்லைன் செயல்முறை குறித்து, காணொலி வாயிலாக விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் 13 தாலுகாவை சேர்ந்த பத்திர ஆவண எழுத்தர்கள், வங்கி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


