திருப்பூர், ஆக. 13: 24வது ‘நிட்ஷோ’ கண்காட்சி வருகிற 21ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. காங்கயம் ரோடு ‘டாப்லைட்’ வளாகத்தில், கண்காட்சி அரங்கம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இது குறித்து கண்காட்சி அமைப்பாளர் கிருஷ்ணா கூறியதாவது: கண்காட்சி 500 ஸ்டால்கள், 1,000க்கும் அதிகமான பிராண்டுகளுடன் தொடங்குகிறது. மத்திய அரசின் 100 சதவீத மானியத்துடன், குறு, சிறு நிறுவனங்கள் ஸ்டால் அமைக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
இந்தியாவுடன் இணைந்து ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், தைவான், தென் கொரியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் தொழில்நுட்பங்களும், உற்பத்தித் தீர்வுகளும், புதுமைகளும், கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படுகிறது. வெளிநாடுகளுக்கு சென்று கண்காட்சிகளை பார்ப்பது அனைவருக்கும் சாத்தியமில்லை. உலகத்தர தொழில்நுட்பங்களை திருப்பூரிலேயே ஒரே இடத்தில் ஒப்பிட்டு செய்யும் வகையில், திருப்பூரில், ‘நிட்ஷோ’ கண்காட்சி நடக்க உள்ளது. திருப்பூர் பின்னலாடை தொழிலும், ஏற்றுமதி வர்த்தகமும், அடுத்தகட்ட வளர்ச்சிப்பாதையில் பயணிக்க, இக்கண்காட்சி முக்கிய ஆதாரமாக இருக்கும்,’’ என்றார்.



