திருப்பூர்,ஆக.13: ஆடி அமாவாசையையொட்டி திருப்பூரில் பார்க் ரோட்டில் உள்ள ராகவேந்திரர் கோயிலில் நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்துக்கள் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் நீர் நிலைகளில் புனித நீராடி மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமானது. அந்த வகையில் ஆடி அமாவாசையான நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்காக திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள ராகவேந்திரர் கோயிலில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் புரோகிதர்கள் மூலம் மூதாதையர்களின் பெயர்களை சொல்லி வேத மந்திரம் ஓதினர்.
பின்னர் பச்சரிசி மாவு, எள், வாழைப்பழம், தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிண்டமாக பிடித்து மந்திரங்கள் ஓதிய பின் அவற்றை தண்ணீரில் கரைத்து தங்கள் முன்னோர்களை நினைத்தும், அவர்களின் ஆசி வேண்டியும் வழிபட்டனர். பின்னர் தர்ப்பணம் கொடுத்தவர்கள் அங்குள்ள விநாயகர் கோயில் முன்விளக்கேற்றினர். மேலும் பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை தானமாக வழங்கினர். இந்த நிகழ்வு நேற்று மாலை வரை நடைபெற்றது. காங்கயம்: காங்கயம் சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயிலில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக வழிந்தது.
சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மடவிளாகம் ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில், நத்தக்காடையூர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோயில், அகிலாண்டபுரம் அகிலாண்டேஸ்வரர் கோயில், காடையூர் காடேஸ்வரர் கோயில், ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் நேற்று அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும் வழிபாடுகள் நடத்தினர். பெருமளவிலான குல தெய்வ கோயில்கள் காங்கயத்தை சுற்றியே அமைந்துள்ளதால் காங்கயம் பஸ் நிலையத்திலும் நேற்று பக்தர்கள் கூட்டம் நிரம்பியிருந்தது.



