திருப்பூர், ஆக. 12: 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெள்ளகோவில் நகராட்சி ஊழியர் திருமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் குமரவேல் வரவேற்றார். மாநில தலைவர் முருகானந்தம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாண்டியம்மாள், மாவட்ட மகளிர் துணைக் குழு அன்னம், மாவட்ட இணை செயலாளர் ராமன், மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் அந்தோணி ஜெயராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியிட மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வு மாறுதல்கள் கலந்தாய்வு குழு மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆய்வு கூட்டங்களை சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் அலுவலக நேரம் கடந்து நடத்துவதை கைவிட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். எல்லை விரிவாக பணிகளுக்கு காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



