திருப்பூர், ஆக.12: தமிழ் மாதங்களில் ஆடி மாதம் கோயில்களில் விஷேச வழிபாட்டிற்கு உகந்த மாதமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஆடி மாத வெள்ளிக்கிழமை, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் ஆகிய நாட்கள் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று (12ம்தேதி) ஆடி அமாவாசை தினம் என்பதால் வீடுகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, சிறப்புப் பூஜைகள் செய்வது வழக்கம். குறிப்பாக திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட், தினசரி சந்தை மற்றும் உழவர் சந்தைகளில் காய்கறிகள் விற்பனை அதிகரித்தது.
இதனால் சந்தைகளில் காய்கறி மற்றும் பழங்களின் விலை உயர்ந்திருந்தது. கேரட் கிலோ ரூ.100, சவ்சவ் கிலோ ரூ.30, பீட்ரூட் கிலோ ரூ.100, பீன்ஸ் ரூ.90, முள்ளங்கி ரூ.40, இஞ்சி ரூ.180, முட்டைக்கோஸ் ரூ.40, காளிபிளவர் ரூ.40, பச்சை மிளகாய் ரூ.50, வெண்டைக்காய் ரூ.60, முருங்கைக்காய் ரூ.50, பீர்க்கங்காய் ரூ.50, புடலங்காய் ரூ100, சீனி அவரை ரூ.50, அவரைக்காய் ரூ.80, தக்காளி, ரூ.20, சின்ன வெங்காயம் ரூ.90, உருளைக்கிழங்கு ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.40, எலுமிச்சை ரூ.100, அரசாணிக்காய் ரூ.20 என விற்பனை செய்யப்பட்டது.
வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மார்க்கெட்டுகளுக்கு வரும் காய்கறி-பழங்களின் வரத்து தற்போதைய பருவநிலை மாற்றம் காரணமாகக் கணிசமாகக் குறைந்துள்ளது. தேவை அதிகமாகி வரத்து குறைந்ததே இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர். அதேபோல் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற உள்ளதால் பூக்களின் தேவையும் உயர்ந்திருந்தது.
அந்த வகையில் நேற்று திருப்பூர் மாநகராட்சி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.480 முதல் ரூ.600 வரையில் மாலை ரூ.800 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. முல்லைப்பூ ரூ.400, செவ்வந்தி ரூ.320, மரிக்கொழுந்து கட்டு ரூ.40 என விற்பனை செய்யப்பட்டது.



