பல்லடம், அக்.17: பல்லடத்தில் திருப்பூர் மாவட்ட லட்சிய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மனித உரிமைகள் அணி மாநில துணை செயலாளர் வெங்கடாசலபதி என்ற ராஜா தலைமை வகித்தார். இதில், திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் லட்சிய ஜனநாயக கட்சி நிறுவனர் ஜோஸ் சார்லஸ் மார்டின் எம்.எல்.ஏ.விற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மனித உரிமைகள் அணிக்கு அதிக உறுப்பினர்களை சேர்ப்பது என்றும் கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு பாடுபடுவது, மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் பணியாற்ற வேண்டும்.
பல்லடத்தில் போக்குவரத்து நெரிசல் தீர்க்க மேம்பாலம் அல்லது புறவழிச்சாலை அமைக்க வேண்டும், பல்லடம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும், பெருகி வரும் மக்கள் தொகைக்குக்கேற்ப பல்லடத்தில் அத்திகடவு 2-ம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


