அவிநாசி, நவ. 15: எஸ்.ஐ.ஆர். பணியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களை ஈடுபடுத்துவதை கண்டித்து, எஸ்.ஐ.ஆர் பணியை புறக்கணித்து மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் ரமேஷ்குமார், வட்டாரத் தலைவர் ஆனந்தன், வட்டார செயலாளர் பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து மாவட்ட பொருளாளர் ரமேஷ் கூறுகையில், ‘‘ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஏற்கனவே குடிநீர் விநியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, சொத்துவரி வசூல், சாலை பராமரிப்பு உள்ளிட்ட பணி நெருக்கடி அதிகளவில் உள்ளது. இந்த நிலையில், கூடுதலாக பிற துறையின் பணிகளையும் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால், எஸ்.ஐ.ஆர் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் ஈடுபட்டுள்ளோம்’’ என்றார்.
