பெண்கள் பாதுகாப்பு உறுதிசெய்ய இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள்
திருப்பூர், நவ. 13: பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் திருப்பூர் மாநகருக்கு வந்துள்ள 8 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களை, மாநகர போலீஸ் கமிஷனர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் அமைதியை பாதுகாத்து சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தமிழக காவல்துறை முக்கிய பங்காற்றி வருகிறது.
இந்நிலையில் காவல்துறையின் பணிகள் சிறக்கும் வகையில் புதிய போலீஸ் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், பாதுகாப்பு பணிகளுக்கு கூடுதல் வாகனங்கள், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் 2025-26ம் ஆண்டுக்கான போலீஸ் மானிய கோரிக்கையில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களை வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்து இருந்தார். அதன்படி, திருப்பூர் மாநகருக்கு 8 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் நேற்று சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
திருப்பூர் வந்த இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பெண் எஸ்.ஐ மற்றும் போலீசார் அடங்கிய குழு இந்த இளஞ்சிவப்பு ரோந்து வாகனத்தில் சென்று பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். இதற்காக, தனியாக பெண் போலீஸ் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.