காலி பணியிடங்களை நிரப்ப கோரி அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர், நவ. 12: திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் புதியதாக திறக்கப்படும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் பணியிடங்கள் புதியதாக நிரப்பப்படாமல் ஏற்கனவே உள்ள மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் பணி செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர்.
ஆட்குறைப்பு செய்யப்படும் மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு ஜேஆர் மறுசீரமைப்பை கைவிட வேண்டும், புதிய அரசு மருத்துவமனைகளுக்கான மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும், ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் டாக்டர் சுரேஷ் ராஜ்குமார் மற்றும் அனைத்து பிரிவு மருத்துவர்களும் கலந்துகொண்டனர்.