திருப்பூர், செப்.9: 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட தலைவர் மேகவர்ணன் தலைமை வகித்தார். மாவட்ட தணிக்கையாளர் மகுடேஸ்வரன், மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பாலச்சந்திரமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும். ஓய்வூதியர்களின் பெற்றோர்களையும், திருமணம் ஆகாத மகள் மற்றும் கணவரை இழந்த மகளையும் இந்த திட்டத்தில் சேர்த்திட வேண்டும். அனைவருக்கும் 100 சதவீத கட்டணமில்லா சிகிச்சை முறையினை உத்திரவாதப்படுத்த வேண்டும். உயர் சிகிச்சைக்கான தொகையினை உயர்த்தி வழங்கி, இதற்கான அதிகபட்ச உச்சவரம்பை தளர்த்த வேண்டும்.
அவசர நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு அதன் முழு தொகையினையும் வழங்க வேண்டும். இந்திய மருத்துவ முறைகளான ஆயுஷ்-ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகிய மருத்துவ சிகிச்சை முறைகளையும் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


