தாராபுரம், செப்.9: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டடம் மற்றும் கிராம பகுதிகளில் எதிர் வரும் 14 மற்றும் 15 தேதிகளில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஸ்வ இந்து பரிசத் ஆகிய இந்து அமைப்புகளின் சார்பில் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற உள்ளது. ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் சிலைகள் அனைத்தும் தாராபுரம் அமராவதி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன.
இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் மனிஷ் தாராபுரம் அமராவதி ஆற்றுப்பகுதிக்குநேரில் ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக செல்லும் பாதைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் மாவட்ட எஸ்பி சிருஷ்டி சிங் தலைமையில் போலீசார் தாராபுரம் அமராவதி அணையிலிருந்து பொள்ளாச்சி சாலை பூக்கடை சந்திப்பு, பெரிய கடை வீதி, ஜவுளிக்கடை வீதி, சுல்தானியா பள்ளிவாசல் தெரு வழியாக 5 சாலை சந்திப்பு அமராவதி ஆறு வரை முக்கிய சாலைகளின் வழியாக அணிவகுப்பை நடத்தினர்.


