காங்கயம், அக். 8: காங்கயம் நகராட்சி பகுதியில் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களின் நலன் மற்றும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்கும் வகையில், நகராட்சிக்குட்பட்ட பள்ளி வளாகங்களில் சிறப்பு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, பள்ளி வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் புகைமருந்து அடிக்கப்பட்டதுடன், கொசு மற்றும் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை அகற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, டெங்கு மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்கும் வகையில், கொசு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் என நகராட்சி சுகாதார அலுவலர் மற்றும் கமிஷ்னர் தெரிவித்தார்.


