Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பட்டுக்கோட்டையார் நகர் மக்களுக்கு பட்டா வழங்க எம்எல்ஏ கோரிக்கை

திருப்பூர், பிப். 5: திருப்பூர் தெற்கு சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் வசிக்கும் 192 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதாவை செல்வராஜ் எம்எல்ஏ நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூர் தெற்கு வட்டம், நல்லூர் கிராமம், பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் சுமார் 3.18 ஏக்கர் நிலம் கடந்த காலங்களில் 5 நபர்களுக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஒப்படைத்த நிபந்தனைகள் மீறப்பட்டதால் அந்த ஒப்படை ஆணைகள் ரத்து செய்யப்பட்டன. அந்த நிலத்தில் சுமார் 192 குடும்பங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

அவர்களுக்கு நிலக்கிரையம் அடிப்படையில் தொகை வசூலித்து முறையாக வீட்டுமனைப்பட்டா வழங்கிட ஏதுவாக அரசாணை பெற வேண்டி மாவட்ட கலெக்டரால் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி, உரிய அரசாணையை வெளியிட்டு அந்தப்பகுதியில் நீண்டகாலமாக வசிக்கும் மக்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.