Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

திருப்பூரில் போலியோ சொட்டு மருந்து முகாம்: தாமதமாக வந்த அமைச்சரால் பெற்றோர்கள் அவதி

திருப்பூர், ஜூன் 29: திருப்பூரில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு அமைச்சர் தாமதமாக வந்ததால் குழந்தையுடன் பெற்றோர்கள் அவதியடைந்தனர். நாடுமுழுவதும் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. அரசு மருத்துவமனைகள், அரசு பள்ளிகள், பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடந்தது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட டிஎஸ்கே மகப்பேறு மருத்துவமனையில் மாநகராட்சி சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக காலை 7 மணி முதல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்த நிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கமலி, காலை 7:30 மணியளவில் நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் நிகழ்ச்சி 9 மணியளவில் தொடங்க இருப்பதாக மாற்றியமைக்கப்பட்டது. இதன் காரணமாக காலை முதல் வந்திருந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்காமல் அமைச்சர் வந்து தொடங்கி வைக்க வேண்டும் என காத்திருக்க வைக்கப்பட்டிருந்தனர். மற்ற முகாம்களில் குழந்தைகளுக்கு 7 மணி முதல் வழங்கப்பட்டாலும் கூட இம்முகாமில் அமைச்சர் வர வேண்டும் என்பதால் குழந்தைகள் காக்க வைக்கப்பட்டிருந்தனர். திருப்பூர் எம்.பி சுப்பராயன், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையாளர் அமீத் உள்ளிட்டோர் வந்திருந்தும் அமைச்சர் வருகை தாமதமானது. 9:20 மணிக்கு அமைச்சர் வருகை தந்த நிலையில் அதற்கு பின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதனால் காலை முதல் பச்சிளம் குழந்தைகளோடு வந்திருந்த தாய்மார்கள அதிருப்தி அடைந்தனர்.