உடுமலை, நவ.8: உடுமலை நகரமன்ற கூட்டத்தில் நேற்று 107 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சியுடன் 2 ஊராட்சிகள் மட்டுமே இணைக்கப்பட உள்ளதாக நகராட்சி தலைவர் தெரிவித்தார். உடுமலை நகரமன்ற கூட்டம் அதன் தலைவர் மத்தீன் தலைமையில் நேற்று நடந்தது. ஆணையர் சரவணகுமார் முன்னிலை வகித்தார் பெரும்பாலான கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரவு செலவு மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் உட்பட 107 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு: உடுமலை நகரில் எந்த தனியார் மருத்துவமனையிலும் பார்க்கிங் வசதி செய்யப்படவில்லை. சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதில் நகரமன்ற தலைவர் பேசுபோது, தனியார் மருத்துவமனைகள் ஆன்லைனில் கட்டிட அனுமதி பெறுகின்றன. நகராட்சிக்கு வருவதில்லை. ஆனாலும் நோட்டீஸ் கொடுக்கலாம் என்றார். அலுவலர்: பார்க்சிங் வசதி அனுமதியுடன்தான் கட்டிடம் கட்டப்படுகிறதா? என உடனடியாக ஆய்வு செய்யப்படும். அப்படி இல்லையென்றால் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பல ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என தீர்மானம் போடப்பட்டது. ஆனால் 2 ஊராட்சிகளை மட்டுமே இணைக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. நகரமன்ற தலைவர்: தற்போது 2 ஊராட்சிகளை இணைக்கத்தான் முடிவாகி உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து இது முடிவு செய்யப்பட்டது.
மேலும், பல்வேறு கோரிக்கைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசியதாவது: உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அதிகளவில் ஆக்கிரமிப்பு உள்ளது. அவற்றை அகற்ற வேண்டும். மழையின் காரணமாக கொசுக்கள் பெருகிவிட்டதால் குடியிருப்பு பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்படுவதால் தூர்வாரி பராமரிக்க வேண்டும். உழவர்சந்தை பகுதியிலும் ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். அவற்றை அகற்ற வேண்டும். நகரில் தெருநாய் தொல்லை அதிகளவில் உள்ளது. மக்கள் நடமாடவே அச்சப்படுகின்றனர். நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.மேலும் ஒரு கவுன்சிலர் பேசுகையில்,``மத்திய பேருந்து நிலையம் அருகே ஜல்லிக்கட்டு சதுக்கம் சமீபத்தில் திறக்கப்பட்டது. அதற்கான கல்வெட்டில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பெயர் இல்லை. பெயரை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதற்கு பதிலளித்த நகர மன்ற தலைவர் கல்வெட்டில் விரைவில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பெயர் சேர்க்கப்படும்’’ என்றார்.


