உடுமலை, டிச. 12: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த, அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்கைள சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதே போல கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் நேரடி பாசன வசதி பெற்று வருகிறது. தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையும், வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் அமராவதி அணைக்கு நீர்வரத்து இருக்கும்.
அமராவதி அணையின் நீர் பாசன வசதியை பெற மட்டுமின்றி கரூர் வரையிலான அமராவதி ஆற்றின் வழியோர கிராமங்களில் வசிக்கின்ற பொதுமக்களின் குடிநீர் தேவை, கால்நடைகளின் குடிநீர் தேவை ஆகியவற்றையும் நிறைவேற்றி வருகிறது. நூற்றுக்கணக்கான கிராமப்பகுதிகளில் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்த அணையில் 4.04 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அணையின் நீர்மட்டம் நேற்று 87.60 அடியாக உயர்ந்தது. 372 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 953 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆற்று வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


