அவிநாசி,செப்.29: விசைத்தறி தொழிலாளர்களின் காப்பீட்டு திட்டம் மற்றும் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய தெருமுனைப் பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் நேற்று திங்கள்கிழமை திருப்பூர் மாவட்டத்தில் துவங்கியது. அவிநாசி அருகே வஞ்சிபாளையம் பகுதியில் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிறுத்தப்பட்ட குழு காப்பீட்டு திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். குடும்பத்தின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் பரிதவிக்கும் விசைத்தறி தொழிலாளர்களுக்காக விசைத்தறி உரிமையாளர் சங்கங்களையும், தொழிற்சங்கங்களையும் அரசு நிர்வாகம் நேரில் அழைத்து பேசி, கூலி உயர்வு ஒப்பந்தத்தை விரைவில் ஏற்படுத்த வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களுக்கும் 12 மணி நேர வேலையை 8 மணி நேரமாக மாற்றி குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.26,000 வழங்க கோரியும், அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் பி..எப், இ.எஸ்.ஐ. உள்ளிட்ட சட்ட சலுகைகளை வழங்க வேண்டும்.
அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் இலவச வீடுகள் கட்டித்தர வேண்டும்.விசைத்தறி தொழிலாளர்களுக்கு நலவாரிய பயன்கள் தடை இல்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்து வட்டி கொடுமையால் நடக்கும் தற்கொலை சாவுகளை தடுத்திட கந்து வட்டிக்கு எதிரான சட்டத்தை கறாராக அமல்படுத்தி மனித உயிர்களை பாதுக்காக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் நாடு தழுவிய தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இதே போல, வஞ்சிபாளையம் பகுதியில் மாவட்ட குழு உறுப்பினர் கார்த்திக் தலைமையிலும் மங்கலம் பகுதியில் மாவட்டத் துணை செயலாளர் குப்புசாமி தலைமையிலும் நடைபெற்றது.இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரங்கராஜ்,, சி.ஐ.டி.யு மாவட்டத் துணைத் தலைவர் உன்னிகிருஷ்ணன், சி.ஐ.டி.யு மாவட்ட நிர்வாகி அன்பு, விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வேலுச்சாமி ,மாவட்ட பொருளாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


