Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெண்கள் அவதி: பயனற்று கிடக்கும் விளம்பர வாகனம்

திருப்பூர், ஜூன் 29: தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பல லட்ச ரூபாய் மதிப்பில் அதிநவீன விளம்பர வாகனம் கடந்த ஆட்சி காலத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டது. இந்த வாகனத்தில் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண், விடியல் பயணம் உள்ளிட்ட அரசின் முக்கிய திட்டங்கள் விளம்பரமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தற்போதும் அந்தத் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறையில் உள்ள நிலையிலும், அரசியல் காரணங்களுக்காக அந்த விளம்பரங்கள் அனைத்தும் வெள்ளைத் தாள்கள் கொண்டு முழுமையாக மறைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பேருந்து முழுவதும் வெள்ளைத் தாள்களால் மூடப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த வாகனம் எங்கும் வெளியில் எடுத்துச் செல்லப்படாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்த வாகனத்தை முறையாக நிறுத்துவதற்கு போதிய இடவசதியோ அல்லது நிழற்குடையோ இல்லாததால், பல லட்சம் மதிப்புள்ள இந்த அரசு வாகனம் வெயிலிலும், மழையிலும் தொடர்ந்து நனைந்து வீணாகி வருகிறது.

மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட வாகனம், பயன்பாடின்றி ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு வீணாவதை தடுத்து, அதனை முறையாகப் பயன்படுத்தி மாவட்டம் முழுவதும் அரசின் திட்டங்கள், அதனை பெறும் முறை, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.