Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

செக்குக்காடு பகுதியில் குடிநீரில் சாயக்கழிவுநீர் கலந்து வருவதாக புகார்

திருப்பூர்,ஜூலை28: திருப்பூரில் சாயக்கழிவு நீரை முறைகேடாக திறந்து விடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர் .திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம நடந்தது. இதில் திருப்பூர் பல்லடம் சாலை செக்குக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கையில் சாயக்கழிவுநீர் கலந்த குடிநீர் பாட்டில்களுடன் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘‘செக்குக்காடு பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இயங்கி வரும் சாய ஆலைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்படாத சாயக்கழிவு நீர் நேரடியாக நிலத்தடியில் செலுத்தப்படுகிறது.இதனால் போர்வல் மற்றும் கிணற்று நீர் முற்றிலும் சிவப்பு நிறமாக மாறிப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

கடந்த 3 மாதங்களாக இந்தப் பிரச்னை நீடித்து வருகிறது. இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளோம். அதிகாரிகள் வந்து ஆய்வு செய்யும் நாளிலும், அதற்கு அடுத்த நாளிலும் மட்டும் தண்ணீர் சரியாக வருகிறது. ஆனால், அதிகாரிகள் சென்றுவிட்ட பிறகு, மீண்டும் சாயக்கழிவு நீரை நிலத்தடியில் அப்படியே பாய்ச்சி விடுகின்றனர். இதனால் நாளுக்கு நாள் நீரின் நிறம் மாறி, சாயம் கலந்த தண்ணீரே வருகிறது. சாயம் கலந்த கழிவுநீரைப் பயன்படுத்துவதால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கை, கால்களில் அரிப்பு, சொறி, சிரங்கு மற்றும் பல்வேறு தோல் நோய்த்தொற்றுகள் ஏற்படுகிறது.

சமையலுக்கும் அன்றாடம் பயன்பாட்டிற்கும் தண்ணீர் இன்றி பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறோம். எனவே விதிமீறிச் செயல்பட்டுச் சாயக்கழிவை நிலத்தடியில் பாய்ச்சும் சாய ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.