Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருப்பூர் மாவட்ட நெசவாளர்கள் சங்கங்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை தயாரிக்க ஆர்டர்கள் குறைப்பு

காங்கயம், செப்.26: திருப்பூர் மாவட்டத்தில் 25 விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் மற்றும் 52 கைத்தறி கூட்டுறவு நெசவாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். வறட்சி மாவட்டமான திருப்பூர் மாவட்டத்தில் நெசவாளர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் மற்றும் பள்ளிச் சீருடை நெசவு செய்யும் பணிதான் ஜீவாதாரமாக ஒவ்வொரு நெசவாளர் குடும்பங்களுக்கும் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு 1 கோடியே 70 லட்சம் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்க அரசு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல், மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட கைத்தறி கூட்டுறவு சங்கம் மற்றும் விசைத்தறி கூட்டுறவு சங்க நெசவாளர்கள் பயன்பட்டு வந்தனர். இதன்மூலம் பல தரப்பினருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டு 8 லட்சம் வேட்டிகள், 8 லட்சம் சேலைகள் தயாரிக்க திருப்பூர் மாவட்ட கூட்டுறவு நெசவாளர் சங்கங்களுக்கு ஆர்டர்கள் தமிழக அரசு சார்பில் மாநில கைத்தறித்துறை மூலம் திருப்பூர் மாவட்ட கைத்தறி துறைக்கு வழங்கப்பட்டது. ஆனால் நடப்பு ஆண்டு 2 லட்சம் வேட்டி, 3 லட்சம் சேலைகள் மட்டுமே தயாரிக்க ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட கைத்தறித்துறை உதவி இயக்குனர், மாநில கைத்தறித்துறை சார்பில் வழங்கப்பட்ட விலையில்லா வேட்டி, சேலைகள் தயாரிக்கும் ஆர்டர்களை அனைத்து சங்கங்களுக்கும் பிரித்து கொடுக்காமல், 2 கூட்டுறவு நெசவாளர்கள் சங்கங்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு மற்ற நெசவாளர்கள் சங்கங்களுக்கு வழங்காமல் புறக்கணித்துவிட்டதாக நெசவாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இதனால் ஆர்டர் கிடைக்காத கூட்டுறவு நெசவாளர் சங்கத்தில் உள்ள பல்லாயிரம் நெசவாளர்கள் வேலை வாய்ப்பின்றி வறுமையில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.