திருப்பூர், செப். 26: திருப்பூர் 11-வது வார்டு பொதுமக்கள் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தக்கோரி நேற்று முதலாவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி 11வது வார்டுக்கு உட்பட்ட திலகர் நகர். புது காலனி ஆகிய பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அந்த பகுதியில் தொழில் நிறுவனங்களும், வணிக வளாகங்களும் உள்ளன. இந்த நிலையில் அந்த பகுதிக்கு முறையாக தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது எந்த ஒரு முறையான பதிலும் அளிப்பதில்லை என தெரிகிறது. 11வது வார்டு மாமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் நேற்று பகுதி பொதுமக்கள் முதலாவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் முறைபடுத்தப்படும் என கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இதனால் மண்டல அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.


