Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஓணம் பண்டிகை கொண்டாட்டம்: பூ மார்க்கெட்டில் திரண்ட மக்கள்

திருப்பூர், ஆக.26: அண்டை மாநிலமான கேரளாவில் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகை, இன்று நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, பின்னலாடை நகரமான திருப்பூரில் தொழில் நிமித்தமாக வந்து தங்கியுள்ள ஆயிரக்கணக்கான கேரள மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்தினருடன் பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது பாரம்பரிய வழக்கப்படி திருப்பூரிலேயே ஓணம் பண்டிகையை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். பண்டிகையையொட்டி தங்களுக்கு அறிமுகமான நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அழைப்பு விடுத்து, தங்கள் வீடுகள் மற்றும் கோயில்கள் முன்பாக வண்ண மயமான அத்தப்பூ கோலமிட்டு வழிபடுவது வழக்கம்.

அத்தப்பூ கோலமிடுவதற்குத் தேவையான விதவிதமான பூக்களை வாங்குவதற்காக நேற்று காலை முதலே திருப்பூர் மாநகராட்சி பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க ஆர்வமாக வந்தனர். இதனால் பூ மார்க்கெட் வளாகம் முழுதும் மக்கள் கூட்டத்தால் அலைமோதியது. அதே நேரத்தில் பூக்கள் வரத்து இருந்ததன் காரணமாக விலை குறைந்து சாமந்தி பூ கிலோ ரூ.180, மல்லி ரூ.600, பன்னீர் ரோஜா ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.240, முல்லை ரூ.480, சம்பங்கி ரூ.240 என விற்பனை செய்யப்பட்டது. மேலும் இந்த பண்டிகையின் முக்கிய அம்சமான ஓணம் சத்யா விருந்து முற்றிலும் சைவ உணவாக தயாரிக்கப்படுவதால், காய்கறிகளின் தேவையும் சந்தையில் பன்மடங்கு அதிகரித்தது. இதன் காரணமாக மாநகராட்சியின் பல்வேறு சந்தைப் பகுதிகளிலும் காய்கறிகள் வாங்கவும் பொதுமக்கள் வந்திருந்தனர்.