திருப்பூர், ஆக. 28: திருப்பூரில் சாப்ட்வேர் தயாரித்து தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு, பணியை முழுமையாக செய்து தராமல் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. திருப்பூர் கொங்கு நகர் அடுத்த பிரிஜ்வே காலனி பகுதியை சேர்ந்த அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர் சங்கத்தின் நிறுவன தலைவர் சுப்பிரமணியம் (60) நேற்று நிர்வாகிகளுடன் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் கமிஷனரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் எங்களுடைய சங்க உறுப்பினர்களின் விவரங்களை ஆன்லைன் முறையில் பதிவு செய்வதற்காக சாப்ட்வேர் உருவாக்க முடிவு செய்து திருப்பூர் மில்லர் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளரை அணுகினோம். சாப்ட்வேர் உருவாக்கி கொடுக்க ரூ.25 ஆயிரம் முன்பணமாக கொடுத்தோம்.
எங்கள் சங்க தகவல்களை இமெயில் மூலமாக அனுப்பி வைத்தோம். சங்கம் தொடர்பான ஆவணங்கள், தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் வழங்கப்பட்டபோதிலும், சாப்ட்வேர் முழுமையாக உருவாக்கப்படவில்லை.பலமுறை சுட்டிக்காட்டிய குறைகளும் சரிசெய்யப்படவில்லை. மேலும், திருத்தங்களை மேற்கொள்ள கூடுதல் பணம் கேட்டார். கூடுதல் பணம் பெற்ற பிறகும் பணிகளை செய்து தராமல் காலதாமதம் செய்தார். இது தொடர்பாக நேரில் பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோதும் முறையான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், அவரது தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வடக்கு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானோம்.
பின்னர் அந்த புகார் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு, விசாரணைக்கு வருமாறு எச்சரித்து, வராவிட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என மிரட்டல் விடுக்கிறார். எனவே, பணம் பெற்று பணியை நிறைவேற்றாதவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய விசாரணையை வேறு அதிகாரியிடம் மாற்றி நியாயமான விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.



