Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உடுமலை பழைய பேருந்து நிலையம் பகுதியில் சாலையை கடக்க சிரமப்படும் மக்கள்

உடுமலை, மே 26: உடுமலை பழைய பேருந்து நிலையம் காமராஜர் சிலை சந்திப்பு, 5 சாலைகள் சந்திக்கும் இடமாகும். சத்திரம் வீதி, பழனி சாலை, பொள்ளாச்சி சாலை, தாராபுரம் சாலை, பைபாஸ் சாலை ஆகிய 5 சாலைகள் சந்திப்பதால் இங்கு எப்போதும் வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும். வணிக வளாகங்கள், கடைகள் அதிகளவில் உள்ளதால் இருசக்கர வாகனங்களும், சரக்கு வாகனங்களும் அதிகளவில் வருகின்றன. பொள்ளாச்சி- பழனி சாலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன.

மேலும், திருமூர்த்திமலை சுற்றுலா தலத்துக்கு செல்லும் வாகனங்கள் நான்கு வழிச்சாலையில் வந்து, பழைய பேருந்து நிலையம் வழியாக தளி ரோடு வழியாக செல்கின்றன. இந்த சந்திப்பில் போக்குவரத்து சிக்னலோ, போக்குவரத்து காவலரோ இல்லை. இதனால், எப்போதும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதனால், இப்பகுதியில் சாலையை கடக்க பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். நேற்று முன்தினம் மாற்றுத்திறனாளி ஒருவர் மூன்று சக்கர சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். வாகனங்கள் தொடர்ச்சியாக சென்றதால் சாலையை கடக்க நீண்ட நேரம் காத்திருந்தார். அவர் மாற்றுத்திறனாளி என்பதை தெரிந்தும் கூட எந்த வாகன ஓட்டியும் நிற்காமல் தொடர்ந்து வாகனத்தை இயக்கிக்கொண்டே இருந்தனர்.

இதை கவனித்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வாகனங்களை நிறுத்தி அவர் சாலையை கடக்க உதவினார். மேலும், தாராபுரம் சாலையில் சிலர் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனாலும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதியில் சிறு சிறு விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. பெரிய அளவில் விபத்து பலி நடக்கும் முன்பாக போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு சிக்னல் அமைக்க வேண்டும். அல்லது போக்குவரத்து காவலரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.