Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தூய்மை பணிகளில் தனியார் மயம்; மாநகராட்சி அலுவலகத்தை சுகாதார தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகை

திருப்பூர், ஜூன் 24: தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்த பிறகு மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகள் என உள்ளாட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் மயப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் தூய்மை பணியாளர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட தலைவர் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு 12 மாநகராட்சிகளில் திடக்கழிவு சேகரிப்பு பணிகளை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க தனியார் நிறுவனத்தை நியமிக்க முன் வந்துள்ளது. கடந்த காலங்களில் இந்த பணிகள் அவுட்சோர்சிங் உள்ளிட்ட வடிவங்களில் ஒப்படைக்கப்பட்டதால் ஊதியம் குறைப்பு, வேலை பாதுகாப்பின்மை, சமூக பாதுகாப்பு மற்றும் தொழிற்சங்க உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளது. எனவே, புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு தூய்மை பணியை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்.

அனைத்து தூய்மை பணியாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பண பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும். திருப்பூரில் துப்புரவு பொறுப்பு மேற்பார்வையாளராக பணிபுரிந்த தொழிலாளி கோபால் மீது எடுக்கப்பட்டுள்ள தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். தற்போது பணியில் உள்ள ஒப்பந்த பணியாளர்களையும், 20 ஆண்டுகளாக ஓட்டுநராக உள்ள தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டிபிசி தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.நடராஜன், ஏஐடியுசி மாநில செயலாளர் என்.சேகர், சுகாதார தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஜெகநாதன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் ஆர்.செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தங்கள் கோரிக்கை மனுவையும் அளித்தனர்.