உடுமலை, ஆக. 20: உடுமலை வட்டாரத்தில் தென்னை 20,000 எக்டரில் பயிரிடப்படுகிறது. தற்போது தென்னையில் இலை கருகல் நோய் பரவ தொடங்கி இருக்கின்றது. இந்த நோயானது இளம் நாற்றுகள் மற்றும் முதிர்ந்த தென்னை மரங்களை தீவிரமாக தாக்கும். இந்த நோய்க்கிருமி இலை மற்றும் காய்களை பாதிக்கும். பொதுவாக முதிர்ந்த தென்னை ஓலைகளில் கீழாக வெளி சுற்றில் உள்ள இலைகளை பாதிக்கும். பாதிப்பிற்குள்ளான ஓலைகள் நுனியில் இருந்து கீழ் வரை கருக ஆரம்பிக்கும். இவை எரிந்து போன தோற்றத்துடன் காணப்படும்.
காய்களின் நுனிப்பகுதியில் இருந்து ஒழுங்கற்ற அலை வடிவிலான அடர் சாம்பலில் இருந்து பழுப்பு நிறப் புள்ளிகள் விளிம்புகளில் காணப்படும். பூஞ்சையானது தேங்காய் பருப்பினில் நுழைவதால் விதைச்சூழ் தசை சேதமடைகிறது. பாதிக்கப்பட்ட காய்கள் வறண்டு சுருங்கி சிதைந்து முதிர்வதற்கு முன்பே விழுந்து விடுகிறது. இதன் மூலம் பத்து முதல் 25 சதவிகிதம் வரை காய்களின் மகசூல் குறைகிறது. இந்நோய் வருடம் முழுவதும் காணப்பட்டாலும் கோடை காலங்களில் பெரிதளவு தென்படுகிறது. பாதிக்கப்பட்ட இலைப்பகுதிகளில் உள்ள பூஞ்சாணத்துகள்கள் மேற்கொண்டு நோயை பிறபகுதிகளுக்கு பரப்புகின்றன. தீவிரமான பாதிப்பிற்குள்ளான இலைகளை அகற்றி எரித்து நோய் பரவலை தடுக்கவும். சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 200 கிராம் உடன் 50 கிலோ கிராம் தொழு உரம் (சாண எரு) + 5 கிலோ கிராம் வேப்பம் புண்ணாக்கு ஒரு மரத்திற்கு ஒரு வருடத்திற்கு என்ற விகிதத்தில் அளிக்கவும்.
2 கிராம் அல்லது ஹெக்ஸகோனசோல் 2 மில்லி லிட்டர் + 100 மில்லி லிட்டர் தண்ணீர் கலந்து மூன்று மாதம் இடைவெளியில் மூன்று முறை வேரின் மூலம் செலுத்தவும். வழக்கமாக ஒரு மரத்திற்கு வழங்கப்படுகின்ற பொட்டாஷ் 2 கிலோ உடன் சேர்த்து கூடுதலாக இரண்டு கிலோகிராம் பொட்டாசியம் சத்து இடவும் என வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.




