திருப்பூர், ஆக. 20: திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் 2-வது, 3-வது மற்றும் 4-வது கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுவதாக தெரிகிறது. குடிநீர் விநியோகத்தை சீரமைக்க கோரி பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாநகராட்சிக்குட்பட்ட அரிசிகடை வீதி பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த மூன்று நாட்களாக பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் தேங்கியும், சாக்கடையில் கலந்தும் வருகிறது. ஏற்கனவே, இதே பகுதியில் ஏற்பட்ட குழாய் உடைப்பை அதிகாரிகள் முறையாக சீரமைக்காததே தற்போதைய உடைப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மாநகரம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில், தண்ணீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகளே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால், அவர்களின் அலட்சியத்தால் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, உடைந்த குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



