Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கழிவுகள் கலக்கும் பாசன குளங்களை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை

உடுமலை, ஜூலை 20: பாசன குளங்களில் கழிவுநீர் மற்றும் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் நேரடியாக கலப்பதாலும், விவசாயம் பாழாகி வருகிறது. இதனைத்தடுக்க நீர் வளத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் நீராதாரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் இருந்து அடுக்குத்தொடராய் ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட குளங்கள் அமைந்துள்ளன. நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கி பழங்காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த குளங்கள், தற்போது படிப்படியாக பாழாகி வருகின்றன. இக்குளங்களுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தளி கால்வாய் வாயிலாக நீர் வழங்கப்பட்டு வருகிறது. நேரடி பாசனம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களின் நிலத்தடி நீருக்கு ஆதாரமாகவும் உள்ள இக்குளங்களில், கழிவு நீர் நேரடியாக கலக்கிறது. குளக்கரைகள் குப்பை கிடங்காக மாற்றப்பட்டு, கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் நேரடியாக பாசன நீரில் கலந்து வருகிறது.

தளி பகுதியில் அமைந்துள்ள தினைக்குளம், பள்ளபாளையத்திலுள்ள செங்குளம், ஒட்டுக்குளம், பெரிய குளம், அம்மாபட்டி குளம், வலையபாளையம், செட்டிகுளம் உள்ளிட்ட குளங்களில், நேரடியாக கழிவு நீர் கலந்து வருகிறது. வழியோர கிராமத்தின் திடக்கழிவுகள், பெரும்பாலான குளங்களின் நீர் தேக்க பரப்பில் வீசப்படுகின்றன. கழிவு நீர் நேரடியாக குளத்தில், கலப்பதால், தண்ணீர் மாசடைந்து சாகுபடியில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகள், ஷட்டர் மற்றும் விளை நிலத்திலுள்ள மடைகளில் அடைத்து கொள்வதுடன் மண் வளத்தையும் பாதிக்கிறது. பெரியகுளம், ஒட்டுக்குளம் கரையிலும் கழிவுகள் கொட்டுவது அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் குளத்தின் நீர் வரத்து கால்வாய்களிலும் கழிவு நீர் கலக்கிறது.

ஏழு குளங்களிலும் உள்நாட்டில் இடம் பெயரும் பறவைகளும், வலசை பறவைகளும் சீசனுக்கு வந்து செல்கின்றன. இதனால், குளங்கள் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் உள்ளன. இக்குளங்களை பாதுகாப்பது அவசியமாகும். உள்ளாட்சி நிர்வாகங்களால் கழிவுநீர் கலப்பதை தடுக்க தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, ஏழு குளங்களின், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் கருதி, நீர் வளத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, மாவட்ட நிர்வாகம் சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்களும், விவசாயிகளும் வலியுறுத்தி உள்ளனர்.