Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மாநகராட்சி விரிவாக்க பணி 19 கிராம ஊராட்சிகள் இணைப்பு முடக்கம்

திருப்பூர், ஆக.18: தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் அறிவிப்புகள் நெருங்கி வரும் நிலையில், திருப்பூர் மாநகராட்சியின் எல்லைகளை விரிவாக்கம் செய்து சுற்றியுள்ள 19 கிராம ஊராட்சிகளை இணைக்கும் திட்டம் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால், தேர்தலுக்கு முன் எல்லை விரிவாக்கம் சாத்தியமில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. திருப்பூர் மாநகராட்சி கடந்த 2008ம் ஆண்டு 52 வார்டுகளுடன் உருவாக்கப்பட்டது. பின்னர் நல்லூர், 15-வேலம்பாளையம் நகராட்சிகள் மற்றும் வீரபாண்டி, செட்டிபாளையம், மண்ணரை, முருகம்பாளையம், முத்தணம்பாளையம், நெருப்பெரிச்சல், தொட்டிபாளையம், ஆண்டிபாளையம் ஆகிய கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டு 60 வார்டுகளாக தரம் உயர்த்தப்பட்டது. இதன்மூலம், மாநகராட்சியின் மொத்த பரப்பளவு 159.35 சதுர கி.மீ அதிகரித்தது.

இந்த 60 வார்டுகளும் நிர்வாக வசதிக்காக தற்போது 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பூர் மாவட்டத்தின் நாச்சிபாளையம் மற்றும் கணியாம்பூண்டி ஆகிய கிராமங்களை இணைக்க முதற்கட்ட அறிவிப்பு வெளியானது. ஆனால், இதுவரை பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படாததால் இறுதி அறிவிப்பு வெளியாகவில்லை.

இதேபோல பெருமாநல்லூர், பழங்கரை, பொங்கலூர், கணக்கம்பாளையம், முதலிபாளையம், இடுவாய், மங்கலம் உள்ளிட்ட 17 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்படலாம் என அறியப்பட்ட நிலையில், தற்போது அந்த நடவடிக்கைகளிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.