திருப்பூர், ஆக. 18: விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் நிறுவனம் சார்பில் கேரள மாநிலம் கொச்சியில் தொடங்கி கர்நாடக மாநிலம் தேவனஹந்தி வரை பெட்ரோல் - டீசல் கொண்டு செல்ல எண்ணெய் குழாய் பதிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் கோவை மாவட்ட இருகூரிலிருந்து - திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை 70 கி.மீ தூரம் விவசாய நிலங்கள் வழியாக அமைக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். இத்திட்டத்திற்காக அரசாணையின்படி 100 சதவீதம் சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளபோதிலும், மாவட்ட நிர்வாகமும் ஐடிபிஎல் நிறுவனமும் வழிகாட்டு மதிப்பில் குறைந்த இழப்பீட்டை வழங்கி வருகின்றனர்.
மேலும், உகாயனூர் கிராமத்தில் பம்பிங் ஸ்டேஷனுக்காக ஐடிபிஎல் நிறுவனம் ஒரு சென்ட் நிலத்திற்கு 2 லட்ச ரூபாய் வீதம் கொள்முதல் செய்துள்ளது, அதற்கு அருகில் குழாய் பதிக்கும் இடத்திற்கு வெறும் 4,000 ரூபாய் மட்டுமே நிர்ணயம் செய்துள்ளது. அமைத்தது போக மீதமுள்ள 10 மீட்டர் நிலத்தை விவசாயிகளிடம் திருப்பி அளிக்க வேண்டும், மேலும், 7 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட பயிர் இழப்பீட்டுத் தொகையை 100 சதவீதம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



